⭐ Rating: 3.5 / 5
Star Cast: தளபதி விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன்
Director: ஹெச்.வினோத்
Music: அனிருத் ரவிச்சந்தர்
வணக்கம் CineTrendzTamil வாசகர்களே! தமிழ் திரையுலகின் இமாலய பாக்ஸ் ஆபீஸ் பேரரசனாகத் திகழும் தளபதி விஜய், முழுநேர அரசியலில் களம் இறங்குவதற்கு முன்பாக நடித்துள்ள கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ (Jana Nayagan) இன்று பல சென்சார் தடைகளைக் கடந்து திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், KVN புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த 'ஒன் லாஸ்ட் டான்ஸ்' கமர்சியல் மாஸ் விருந்தைக் கொடுத்ததா? இல்லையா? என்பதை இந்த பிரத்யேக முழு விமர்சனத்தில் விரிவாகப் பார்க்கலாம் வாங்க.
திரைப்படத்தின் கதையின்படி, சிறையில் கைதியாக இருக்கிறார் தளபதி வெற்றிக் கொண்டான் (விஜய்). காவல்துறைக்கு அவர் செய்யும் சில மிகப்பெரிய உதவிகளுக்குக் கைமாறாக, மரணத் தருவாயில் இருக்கும் அவரது தாயைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறார் நேர்மையான அதிகாரி ஸ்ரீகாந்த் (கௌதம் வாசுதேவ் மேனன்). ஆனால், விதிகளை மீறியதற்காக ஸ்ரீகாந்த் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் ஸ்ரீகாந்த் உயிரிழந்துவிட, அவரது ஆசை மகளான விஜியை (மமிதா பைஜூ) தனது சொந்த மகளாகவே எடுத்து வளர்க்கிறார் தளபதி வெற்றிக் கொண்டான்.
அரசியல் சதியும் ராணுவக் கனவும்: ஜனநாயகன் படத்தின் விறுவிறுப்பான கதைக்களம்!
தன் வளர்ப்பு மகளான விஜியை இந்திய ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்ற அவளது தந்தையின் கனவை நனவாக்கும் முயற்சியில் தளபதி தீவிரமாக ஈடுபடுகிறார். இதனிடையே, தமிழ்நாட்டின் சுயநல அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து, தன் சொந்த லாபத்திற்காக ஒட்டுமொத்தத் தமிழகத்தையே அழிக்கத் திட்டம் தீட்டுகிறான் சர்வதேசக் குற்றவாளியான ஜான் ஹிம்லர் (பாபி தியோல்). இத்தகைய ஆபத்தான சூழலில், சர்வதேச வில்லன்களின் சதியை முறியடித்து, தமிழகத்தை தளபதி வெற்றிக் கொண்டான் எப்படி மீட்டார்? விஜி ராணுவ அதிகாரி ஆனாரா? இல்லையா? என்பதே இந்த ‘ஜனநாயகன்’ படத்தின் மீதிக்கதை.
தளபதி விஜயின் கடைசி படம் என்பதால், தன்னால் முடிந்தவரை மாஸ் தருணங்களை நிரப்பி ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் தியேட்டர் கொண்டாட்டத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். தனது வழக்கமான அசாத்திய முகபாவனைகள், உடல்மொழிகள் மற்றும் துள்ளலான ரியாக்ஷன்களால் கவரும் விஜய், 'ஒன் லாஸ்ட் டான்ஸ்' என நடனத்தில் பட்டையைக் கிளப்புகிறார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகைப்படத்துடன் விஜய்க்கு கொடுக்கப்படும் மிரட்டலான இன்ட்ரோ காட்சி, தியேட்டரையே உலுக்கும் இடைவேளைக் பிளாக், 'நான் ஆணையிட்டால்' பாணியில் சாட்டை சுழற்றும் அதிரடிக் காட்சி, அரசியல் பஞ்ச் வசனங்கள் எனப் படம் முழுக்கத் தளபதி தனி ஆளாகத் தெறிக்கவிட்டுள்ளார். நிச்சயம் மாஸ் கமர்சியல் சினிமா இனி தளபதி விஜயை மிகவும் மிஸ் செய்யும்!
நட்சத்திரங்களின் நடிப்பு மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத்தின் மேஜிக்!
மகளாகக் குறும்புத்தனமான நடிப்பிலும், படத்தின் பிற்பாதியில் ஆக்ஷன் காட்சிகளிலும் மமிதா பைஜூ ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறார். பூஜா ஹெக்டேவிற்கு சொல்லிக்கொள்ளும்படி பெரிய காட்சிகள் இல்லை என்றாலும், இருக்கும் இடங்களில் அழகு சேர்க்கிறார். சர்வதேச வில்லனாக முரட்டுத்தனமான ஆக்ஷனில் மிரட்டியுள்ளார் பாபி தியோல். பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்குத் தேவையான கச்சிதமான நடிப்பை வழங்கியுள்ளனர்.
இயக்குநர் ஹெச்.வினோத் தெலுங்கின் 'பகவந்த் கேசரி' படத்தின் மையக்கருவையும், பல காட்சிகளையும் எடுத்துக்கொண்டு, அதில் தன்னுடைய கற்பனையையும் நடப்பு அரசியலையும் கலந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். சூப்பர் மார்க்கெட்டில் பூஜா ஹெக்டேவை சந்தித்து நக்கலடிக்கும் காட்சிகள், மமிதாவுக்கான ராணுவப் பயிற்சி, சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சாட்டையடி வசனங்கள் ஆகியவை அந்த படத்தின் சாயலைக் கொண்டுள்ளன. "பொண்ணுங்களுக்கு பயம் இருக்கக் கூடாது, புலி மாதிரி வளர்க்கணும்" எனப் பெண்கள் முன்னேற்றம் குறித்தும், மத நல்லிணக்கம் மற்றும் வெறுப்பு பிரச்சாரங்களுக்கு எதிராகவும் படம் அழுத்தமாகப் பேசுகிறது.
தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பின்னணி இசை!
ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் எனப் பல இடங்களுக்குச் சென்று ரிமோட் கண்ட்ரோல் வார், ரோபோடிக் தொழில்நுட்பம், கள்ளச்சாராய மரணம் மற்றும் கனிமவளக் கொள்ளை என ஏராளமான சமூக விஷயங்களை அரசியல் பின்னணியில் படம் தொட்டுச் செல்கிறது. இருப்பினும், கிளைமேக்ஸில் வரும் நீள……ட சண்டைக் காட்சிகள் தியேட்டரில் சற்று சோர்வடைய வைக்கின்றன. 3 மணி நேரப் படத்தொகுப்பை எடிட்டிங்கில் இன்னும் சுருக்கியிருக்கலாம். இசையமைப்பாளர் அனிருத்தின் மாஸான பாடல்களும், வெறித்தனமான பின்னணி இசையும் படத்தின் ஒவ்வொரு காட்சிகளுக்கும் மிகப்பெரிய பலமாக அமைந்து அனிருத்தின் தேவையை மீண்டும் நிரூபித்துள்ளன.
நம்ம CineTrendzTamil பார்வையில் படத்தின் பிளஸ் மற்றும் மைனஸ்:
- பிளஸ் பாயிண்ட் (Pros): தளபதி விஜயின் வெறித்தனமான திரை ஆளுமை, மாஸ் டான்ஸ் மற்றும் ஆக்ஷன், மமிதா பைஜூவின் எதார்த்த நடிப்பு, பெண்கள் முன்னேற்றம் மற்றும் மத நல்லிணக்கம் பேசும் வசனங்கள், அனிருத்தின் மிரட்டலான பிஜிஎம்.
- மைனஸ் பாயிண்ட் (Cons): பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் சாயல், 3 மணி நேர நீளமான திரைக்கதை மற்றும் கிளைமேக்ஸில் சற்று அலுப்பைத் தரும் நீண்ட சண்டைக்காட்சிகள்.
மொத்தத்தில், பெண்கள் முன்னேற்றம் மற்றும் அரசியல் விழிப்புணர்வு பேசும் இந்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் நல்ல நோக்கத்தைப் பாராட்டலாம். சுற்றி வளைத்துப் பேசாமல் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சுருக்கமாகச் சொல்லியிருந்தால் பொது ஆடியன்ஸுக்கு இன்னும் பெரிய அளவிலான திருப்தியைக் கொடுத்திருக்கும். மற்றபடி தளபதி விஜயின் ரசிகர்கள் மற்றும் கமர்சியல் ஆக்ஷன் பிரியர்களுக்கு இந்த 'ஜனநாயகன்' தியேட்டரில் ஒரு செம்ம கொண்டாட்டமான 'ஒன் லாஸ்ட் டைம்' மாஸ் ட்ரீட்!
சினிமா விமர்சனம் -களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள CineTrendzTamil-ஐ follow பண்ணுங்க!