அன்பே டயானா விமர்சனம்: காதலுக்கு சாதி, மதம் தடையில்லை! பாரி இளவழகனின் அன்பே டயானா தியேட்டர் பிளாஸ்டா?!

Anbe Diana Movie Review Rating Card Pari Elavazhagan Ramya Ranganathan CineTrendzTamil

Image credit: Million Dollars Studios / Anbe Diana Movie Team

Rating: 3.5 / 5

Star Cast: பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி

Director: பாரி இளவழகன்

வணக்கம் CineTrendzTamil வாசகர்களே! 'ஜமா' திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனது அசாத்திய கலைத் திறமையை நிரூபித்தவர் பாரி இளவழகன். கலைப் படங்கள் மட்டுமின்றி, என்னால் பக்கா கமர்சியலாகவும் ஒரு ஜாலியான திரைப்படத்தைக் கொடுக்க முடியும் என அவர் நிரூபித்திருக்கும் திரைப்படம் தான் இந்த 'அன்பே டயானா'. திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கும் இத்திரைப்படத்தை பாரி இளவழகன் எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மில்லியன் டாலர்ஸ் தயாரிப்பில் தொடர்ந்து குறைந்த பட்ஜெட்டில் தரமான ஃபீல் குட் படங்கள் வெளியாகி வரும் நிலையில், அந்த வரிசையில் இந்த 'அன்பே டயானா' திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்து தியேட்டர்களில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை இந்த புதிய பிரத்யேக முழு விமர்சனத்தில் விரிவாக அலசிப் பார்க்கலாம் வாங்க.

படத்தில் ஹீரோவுக்கு ஜோடியாக மேஜிக் டயானா எனும் கதாபாத்திரத்தில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பட புகழ் ரம்யா ரங்கநாதன் ஒரு பக்காவான ஆங்கிலோ இந்தியன் பெண்ணாகவே வாழ்ந்து காட்டியுள்ளார். இவர்களுடன் 'பரிதாபங்கள்' கோபி பெங்களூருவில் பிறந்து பெரம்பூரில் செட்டிலான ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தியேட்டரை முழுமையான ஃபன் ரைடாக மாற்றுவதில் இவரது டைமிங் காமெடி மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகள் படத்திற்குப் பக்காவாகக் கைகொடுத்துள்ளன.

பெரம்பூர் பின்னணியில் சாதி, மத தடைகளை உடைக்கும் அன்பே டயானா கதைக்களம்!

திரைப்படத்தின் கதை முழுமையாக முதலமைச்சர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியைச் சுற்றித் தான் மிக எதார்த்தமாக நகர்கிறது. இதற்காக ஆரம்பத்திலேயே இந்த படத்திலும் விஜய்க்கு நன்றி தெரிவித்து தேங்க்ஸ் கார்டு போட்டு விடுகிறார்கள். சென்னையில் வாழும் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த தெலுங்கு குடும்பத்துப் பையனாக சிருமாமில்ல சீதா கிருஷ்ணா (CSK) என்ற கதாபாத்திரத்தில் ஹீரோ பாரி இளவழகன் நடித்துள்ளார். college காலத்திலிருந்தே ஆங்கிலோ இந்தியன் பெண்ணான மேஜிக் டயானா கோன்சால்வ்ஸை உருகி உருகிக் காதலித்து வரும் சிஎஸ்கே, அவளிடம் தனது காதலைச் சொல்லத் தவிக்கிறார். ஆனால், டயானாவோ பல வருடங்களாக இவரை ஒரு நல்ல நட்பாக மட்டுமே பழகி வருகிறார்; காதலை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

OFFICIAL TRAILER REVEAL - ANBE DIANA | PARI ELAVAZHAGAN 🎬

பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன் நடித்த 'அன்பே டயானா' அதிகாரப்பூர்வ தமிழ் ட்ரெய்லரை இங்கே காணலாம்!

ஹீரோவின் அப்பாவாக வரும் சேத்தன் காது கேட்கும் மெஷினை மாட்டிக் கொண்டு, முதல் காட்சியிலேயே சட்டை இல்லாமல் வருவதில் தொடங்கி, கிளைமேக்ஸில் திருமண மண்டபத்தில் குறட்டை விடும் காட்சி வரை மனுஷன் கிடைக்கிற கேப்பில் எல்லாம் புகுந்து விளையாடி எக்கச்சக்கமாக ஸ்கோர் செய்துவிட்டார். 'ஜமா' படத்தைத் தொடர்ந்து இதிலும் சேத்தனின் அசாத்திய நடிப்பை இயக்குநர் பாரி மிகச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார். சிஎஸ்கேவின் அம்மாவாக நடித்துள்ள ரோஜா, கடுமையான சாதி பார்க்கும் நபராகவும், சொந்தக்காரர்களே வேறு சாதியில் திருமணம் செய்யக் கூடாது எனச் சண்டை போடும் ஒரு டெரர் கேரக்டராகவும் வருகிறார்.

இப்படிப்பட்ட டெரர் அம்மாவாவின் பேச்சுக்கு மறுப்பு சொல்ல முடியாமல் தவிக்கும் சிஎஸ்கேவுக்கு, தனது ஒன் சைட் லவ் ஓகே ஆனதா? அந்த காதலைத் தனது கடுமையான குடும்பத்தில் தைரியமாகச் சொல்லி எப்படிச் சம்மதிக்க வைத்தார்? இதற்கிடையில் தனது அண்ணன் மகளை ஹீரோவுக்குக் கட்டி வைக்க அம்மா ரோஜா போட்ட பிளான் என்னவானது? என்பதை 2.30 மணி நேரம் முழுக்க முழுக்க நகைச்சுவையாகவும், அதே சமயம் காதலுக்குச் சாதி, மதம் எதுவும் தடையில்லை என்கிற முக்கிய மெசேஜை வைத்தும் இயல்பாகச் சொல்லியிருக்கும் திரைப்படம் தான் இந்த அன்பே டயானா.

இயக்குநரின் எதார்த்தமான நகைச்சுவை மற்றும் நட்சத்திரங்களின் மிரட்டலான நடிப்பு!

புரட்டாசி விரதக் காலத்தில் வீட்டிலும் நான்வெஜ் கிடையாது, வெளியிலும் சாப்பிடக் கூடாது என அம்மா ரோஜா ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட, காதலியின் ஆங்கிலோ இந்தியன் வீட்டில் மாட்டுக்கறியும், பன்றிக்கறியும் சமைத்து வைக்க ஹீரோ செய்யும் லூட்டிகள் தியேட்டரில் சிரிப்பலையை உண்டாக்குகின்றன. பல இடங்களில் பாரி இளவழகன் ஏகப்பட்ட குட் பாயிண்ட்டுகளைப் பிரதிபலிக்கிறார். 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படம் பிடித்தவர்களுக்கு கண்டிப்பாக இந்த படமும் பிடிக்கும். பாரி சில இடங்களில் சுமார் மூஞ்சு குமாரை அடிக்கடி ஞாபகப்படுத்துகிறார். மேஜிக் டயானா கதாபாத்திரத்தில் ரம்யா ரங்கநாதன் ஸ்க்ரீனில் செம மேஜிக் செய்துள்ளார். ஆங்கிலோ இந்தியன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற அவரது காஸ்ட்யூம் முதல் அந்த ஓட்டக் கண்ணாடி வரை எல்லாத்தையும் இயக்குநர் பாரி ரசித்து ரசித்து செதுக்கியுள்ளார். தனுஷ் தனது படத்தில் இவரைச் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டார் என்றே இந்த நடிப்புத் திறன் தோன்ற வைக்கிறது.

வொண்டர்லேண்ட் எனும் இடத்தில் பட்டாம்பூச்சிகள் பறக்க இருவரது லவ் ஸ்பாட்டாக உள்ள இடம் தொடங்கி பெரம்பூர் பாலம், ஷாலிமார், அத்தோ கடை என வட சென்னையின் ஏகப்பட்ட வாழ்வியல் விஷயங்களையும் ரசனை மாறாமல் எக்ஸ்ப்ளோர் செய்துள்ளனர். பெற்றோர்களை வில்லன்களைப் போலப் பார்க்காமல், அவங்களிடம் இருக்கும் சில வீக்னெஸ் பாயிண்ட்டுகளைப் பிடித்துச் சரியான நேரத்தில் காதலைச் சொன்னால் அவங்க ஃபிளாட் ஆகிவிடுவார்கள் போன்ற எதார்த்தமான அணுகுமுறை பாராட்டுக்குரியது. ரோஜாவுக்குச் சேத்தன் காபி போட்டுக் கொடுக்கும் அந்த ஒரு காட்சி, பாரி - ரம்யாவின் காதல் காட்சிகளை விட 100 மடங்கு அற்புதம். செல் முருகன் மற்றும் மைண்ட் ஆட்டிசம் பெண்ணாக நடித்துள்ள அந்த சின்னப் பாப்பா என அனைவரது நடிப்பும் படத்திற்குப் பெரிய பலம் சேர்த்துள்ளது.

பின்னணி இசை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு!

ஹீரோவாகவும் இயக்குநராகவும் தியேட்டரிக்கல் வெற்றியைப் பெற்றாக வேண்டும் என்கிற முனைப்புடன் பாரி இளவழகன் போட்டுள்ள உழைப்பு ஒவ்வொரு ஃபிரேமிலும் தெளிவாகத் தெரிகிறது. 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் ஒரு ஜாலியான ஃபன் வெர்ஷனைப் பார்த்தது போன்ற உணர்வைக் கொடுத்த விதம் படத்தின் பலம். பரத் சங்கரின் இசை மற்றும் பாடல்கள் கதைக்குத் தேவையான அளவில் கச்சிதமாக அமைந்துள்ளன. ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் குறைந்த பட்ஜெட்டில் பெரம்பூரை ஒரு ஃபாரின் ரேஞ்சுக்கு எப்படியெல்லாம் காட்ட முடியுமோ அப்படியெல்லாம் காட்டி அசத்தியுள்ளார். கொஞ்சம் மிஸ் ஆனாலும் சீரியல் போன்ற உணர்வைத் தந்துவிடும் இடங்களிலும், அவரது நேர்த்தியான லென்ஸ் ஒர்க் படத்தை அழகாகக் காப்பாற்றியுள்ளது.

நம்ம CineTrendzTamil பார்வையில் படத்தின் பிளஸ் மற்றும் மைனஸ்:

  • பிளஸ் பாயிண்ட் (Pros): பாரி இளவழகன் மற்றும் ரம்யா ரங்கநாதனின் க்யூட் நடிப்பு, சேத்தன் - ரோஜாவின் எதார்த்தமான தம்பதி காமெடி, பரிதாபங்கள் கோபியின் இரண்டாம் பாதி ஃபன் ரைடு, பெரம்பூரை அழகாகக் காட்டிய ஷெல்லியின் ஒளிப்பதிவு.
  • மைனஸ் பாயிண்ட் (Cons): பைக்கில் போகும் போதெல்லாம் ஷேக் ஆகும் கேமரா அசைவுகள், ரோஜாவின் கதாபாத்திரத்தை ஆரம்பத்தில் மிக டெரராகக் காட்டிவிட்டு பின் பாதியில் டக்கென மாற்றுவது, தேவையற்ற அப்பா ஃபிளாஷ்பேக் மற்றும் ஹீரோ மாமனாரை அடிக்கும் சில தர்க்கப் பிழைகள்.

இருப்பினும், சொந்த சாதியிலேயே திருமணம் செய்தாலும், கலப்புத் திருமணம் செய்தாலும், காதல் திருமணம் செய்தாலும் அல்லது பெற்றவர்கள் பார்த்து வைத்து நடத்தும் கட்டாயத் திருமணமாக இருந்தாலும், கணவன் - மனைவி இருவரும் சந்தோஷமாக கடைசி வரை சேர்ந்து வாழ வேண்டும் என்கிற மிக உன்னதமான மெசேஜை இயக்குநர் பாரி அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். சில திரைக்கதை தொய்வுகளைத் தாண்டி, இந்த வார இறுதியில் தாராளமாகக் குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று இந்த ஜாலியான 'அன்பே டயானா' திரைப்படத்தை தைரியமாக நம்பிப் பார்க்கலாம்!

சினிமா review-களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள CineTrendzTamil-ஐ follow பண்ணுங்க!

Post a Comment

Previous Post Next Post