Vaa Vaathiyaar Review – வா வாத்தியார் விமர்சனம் | கார்த்தியின் அந்நியன் லெவல் நடிப்பு!
Rating: ⭐⭐⭐☆☆(3.0/5)
Star Cast: கார்த்தி, க்ரித்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், கருணாகரன், ஆனந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத்
Director: நலன் குமாரசாமி
Music: சந்தோஷ் நாராயணன்
Producer: ஞானவேல் ராஜா
பல வருடங்களாக அறிவிக்கப்பட்டும், பல தடவை ரிலீஸ் தேதி மாற்றப்பட்டும் வந்த படம் தான் “வா வாத்தியார்”. சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற தரமான படங்களை கொடுத்த நலன் குமாரசாமி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் இந்தப் படம், ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இப்போது ஒரு வழியாக படம் திரைக்கு வந்துள்ள நிலையில், “வா வாத்தியார்” உண்மையில் எப்படி இருக்கிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.
கதை என்ன?
ராஜ்கிரண் ஒரு தீவிர எம்ஜிஆர் ரசிகர். எம்ஜிஆர் படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, அதே நாளில் அதே நேரத்தில் அவருக்கு ஒரு பேரன் பிறக்கிறான். அந்தக் குழந்தையை எம்ஜிஆரின் அடுத்த அவதாரமாகவே பார்க்கிறார் ராஜ்கிரண். நேர்மை, ஒழுக்கம், மக்கள் சேவை போன்ற மதிப்புகளோடு அவனை வளர்க்கிறார். அந்த பேரன்தான் கார்த்தி.
ஆனால் வளர்ந்த பிறகு, கார்த்தியின் வாழ்க்கையில் சில சூழ்நிலைகள் மாற்றங்களை உண்டாக்குகின்றன. தகிடுதத்தங்கள், சிறிய குறும்புகள், லைட் காமெடி வாழ்க்கை என போகும் கார்த்தி, ஒரு கட்டத்தில் அநீதிகளை தட்டி கேட்கும் ஹீரோவாக மாறுகிறார். இரவு நேரங்களில் வேறு ஒரு ரூபம் எடுத்து, சமூக அநீதிகளுக்கு எதிராக போராடுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.
கார்த்தியின் நடிப்பு – படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்
இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமே கார்த்தியின் நடிப்புதான். ராமேஸ்வரம், ராமச்சந்திரன் என இரண்டு விதமான கேரக்டர்களை அவர் நடித்திருப்பது படத்திற்கு பெரிய பலம். ஒரே நேரத்தில் இரண்டு விதமான மனநிலைகளில் அவர் மாறி மாறி நடிக்கும் காட்சிகள் ரசிகர்களை கவர்கின்றன.
“அந்நியன்” படத்தில் விக்ரம் எப்படி அம்பி, ரெமோ, அந்நியன் என மூன்று ரூபங்களில் அசத்தினாரோ, அதே மாதிரி இங்கே கார்த்தியும் ஒரு லெவல் மேலே போய் தன் வேறுபட்ட நடிப்பை காட்டுகிறார். எந்தவித குழப்பமும் இல்லாமல், ரசிகர்களிடம் நேரடியாக கனெக்ட் ஆகும் விதத்தில் அவர் நடித்திருப்பது பாராட்டுக்குரியது.
ஆனால் எம்ஜிஆர் ரூபத்தில் வரும் சில காட்சிகளில், சற்று செயற்கைத்தனம் தெரிகிறது. சில மேனரிஸங்கள் ஒட்டாமல் போவதும் உண்மை. இருந்தாலும், அதை அவர் தனது நடிப்பால் சமாளித்துவிட்டார்.
நடிகர், நடிகைகள்
க்ரித்தி ஷெட்டிக்கு இது முதல் தமிழ் படம். அவருடைய கேரக்டர் இன்னும் ஸ்ட்ராங்காக எழுதப்பட்டிருக்கலாம். சில பாடல் காட்சிகளில் அவருடைய நடனம் கவனம் ஈர்த்தாலும், நடிப்பு ரீதியாக பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
ராஜ்கிரண் எம்ஜிஆர் ரசிகராக வருகிறார். அவர் அந்த கேரக்டருக்கு முழு உயிர் கொடுத்திருக்கிறார். ஒரு உண்மையான ரசிகன் எவ்வளவு தீவிரமாக இருப்பான் என்பதை அவர் கண் முன்னே நிறுத்துகிறார்.
வில்லனாக சத்யராஜ். ஆனால் அவருக்கு இந்தப் படத்தில் வில்லத்தனம் கொஞ்சம் கம்மிதான். மேக்கப், தோற்றம் எல்லாம் அவருக்கு சரியாக செட் ஆகவில்லை என்றே சொல்லலாம். “யானை பசிக்கு சோளப்பொறி” மாதிரி இந்த ரோல் அவருக்கு போதவில்லை.
ஆனந்த் ராஜ், கருணாகரன், ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்டவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.
நலன் குமாரசாமியின் மேக்கிங்
நலன் குமாரசாமி இன்னும் தனது பழைய ஸ்டைலை இழக்கவில்லை. விறுவிறுப்பான திரைக்கதை, டார்க் காமெடி வசனங்கள், வித்தியாசமான கேரக்டர் வடிவமைப்பு – இதெல்லாம் அவர் பலம்.
ஆனால் ராமேஸ்வரம் ராமச்சந்திரனாக மாறும் இடங்களில் இன்னும் கொஞ்சம் கிளாரிட்டி கொடுத்திருக்கலாம். “ஃபேண்டஸி” என்று சொல்லியும், சில இடங்களில் மேஜிக் ஷோ மாதிரி தோன்றுவது படத்தின் மைனஸ்.
சந்தோஷ் நாராயணன் – இசையில் மிரட்டல்
படத்தின் இன்னொரு பெரிய ப்ளஸ் சந்தோஷ் நாராயணன். சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களில் நலன் – சந்தோஷ் கூட்டணி எப்படி மிரட்டியதோ, அதே மாதிரி இங்கேயும் அவர் தன் முத்திரையை பதித்திருக்கிறார்.
படம் ஆரம்பம் முதல் கடைசி வரை, சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி இசையை கொடுத்து, காட்சிகளை இன்னும் அழகாக மாற்றியிருக்கிறார்.
படத்தின் மைனஸ் பாயிண்ட்ஸ்
- கதைக்களத்தில் இன்னும் ஆழம் இருக்கலாம்
- சில இடங்களில் லாஜிக் ஓட்டைகள்
- எம்ஜிஆர் ரூபம் சில இடங்களில் செயற்கையாக தெரிகிறது
- வில்லன் கேரக்டர் ஸ்ட்ராங்காக இல்லை
இயக்குநரின் முழுக் கவனமும் கார்த்தியின் கேரக்டரை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே இருந்துவிட்டது. அதனால் கதைக்களம் கொஞ்சம் பின்தங்கியதாக தெரிகிறது.
மொத்தத்தில் எப்படி?
பல வருடங்களுக்கு பிறகு படம் இயக்கிய நலன் குமாரசாமி, “வா வாத்தியார்” மூலம் பாஸ் மார்க்குக்கும் மேலே வாங்குகிறார். கார்த்தியின் அசத்தலான நடிப்பு, சந்தோஷ் நாராயணனின் இசை, விறுவிறுப்பான மேக்கிங் – இதெல்லாம் சேர்ந்து படத்தை பார்க்க வைக்கும்.
கதையில் சில குறைகள் இருந்தாலும், குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று “வா வாத்தியார்”-க்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு வரலாம்.
Final Verdict
வா வாத்தியார் – கார்த்தியின் நடிப்புக்காகவும், நலன் – சந்தோஷ் கூட்டணிக்காகவும் ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்!
Rating: ⭐⭐⭐☆☆ (3.0/5)
0 Comments