The Raja Saab திரை விமர்சனம் | பிரபாஸ் நடித்த ஹாரர் ஃபேண்டசி படம் எப்படி?
தி ராஜா சாப் (The Raja Saab) – இந்திய சினிமாவில் ஹாரர் ஃபேண்டசி ஜானர் என்றாலே ஒரு மினிமம் கேரண்டி இருக்கும். அந்த வகையில், இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான பிரபாஸ் நடிப்பில் உருவான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? முழுமையான திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
கதைக்களம் (Story Plot)
பிரபாஸ், யாரும் இல்லாத ஒரு அனாதையாக இருந்தாலும், தன் பாட்டியின் அன்பில் வளர்ந்து வரும் இளைஞராக கதையில் அறிமுகமாகிறார். அந்த பாட்டி, தன்னுடைய தொலைந்து போன கணவரைப் பற்றியே எப்போதும் பேசிக்கொண்டிருப்பவர்.
அவர் நினைவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும், தன் கணவரை மட்டும் மறக்காமல் இருக்கிறார். எப்படியாவது தன் கணவரை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்குள் ஆழமாக இருக்கிறது.
இதனால், தன்னை வளர்த்த அந்த பாட்டிக்காக, அவளது கணவரைத் தேடி பிரபாஸ் ஒரு பயணத்தை தொடங்குகிறார். அந்த பயணத்தின் போது, நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரிதி என மூன்று பெண்களுடன் காதல், காமெடி, கலாட்டா என கதைக்களம் நகர்கிறது.
இதே நேரத்தில், தாத்தா கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிக்கிறார். அவர் ஒரு மாந்திரிகவாதி என்றும், பணத்தை கொள்ளையடிக்கும் வில்லன் என்றும் பல தகவல்கள் வெளிப்படுகின்றன. மறுபக்கம், சமுத்திரகனி சஞ்சய் தத்தை தேடி வருகிறார். சஞ்சய் தத் யார்? அவர் உண்மையில் வில்லனா? பிரபாஸ் அவரை கண்டுபிடித்தாரா? சமுத்திரகனி கதாபாத்திரத்தின் நோக்கம் என்ன? என்பதே மீதிக்கதை.
படத்தைப் பற்றிய அலசல் (Movie Review)
முழுப் படத்தையும் தனி ஆளாக தாங்கி பிடிப்பவர் பிரபாஸ்தான். இதுவரை முரட்டுத்தனமான ஆக்ஷன் ஹீரோ இமேஜில் மட்டுமே பார்த்த ரசிகர்களுக்கு, இந்த படத்தில் ஜாலியான, காமெடி கலந்த பிரபாஸ் புதுமையாக தெரிகிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஆட்டம், பாட்டம், நகைச்சுவை என ரசிகர்களை கவரும் வகையில் பிரபாஸ் கலக்கி இருக்கிறார். குறிப்பாக, தன் தாத்தா சஞ்சய் தத்துடன் சவால் விடும் காட்சிகளும், கிளைமேக்ஸில் ஜோக்கர் போல மாறும் காட்சியும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறுகிறது.
நாயகிகள் & துணை கதாபாத்திரங்கள்
படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். ஆனால், மூவருக்கும் பெரிய கதாபாத்திர அமைப்பு இல்லை. க்ளாமர், காதல் காட்சிகள் என்பதோடு அவர்களின் பங்கு முடிந்து விடுகிறது.
மாளவிகாவிற்கு சில ஆக்ஷன் காட்சிகள் இருந்தாலும், அதிகமாக க்ளாமர் பக்கமே பயன்படுத்தப்பட்டுள்ளார். நிதி அகர்வால் மற்றும் ரிதியின் கதாபாத்திரங்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
வில்லன் வேடத்தில் சஞ்சய் தத் தன் உடல் மொழி மற்றும் டயலாக் டெலிவரியால் மிரட்டுகிறார். சமுத்திரகனி கதாபாத்திரம் கதைக்கு தேவையான திருப்பங்களை கொடுக்கிறது.
திரைக்கதை & இயக்கம்
படம் தொடங்கிய முதல் பாதி, குறிப்பாக சஞ்சய் தத் வரும்வரை, பார்வையாளர்களுக்கு பெரும் சோதனையாகவே நகர்கிறது. எந்த ஒரு முக்கிய திருப்பமும் இல்லாமல் கதை ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டே இருப்பது பொறுமையை சோதிக்கிறது.
இடைவேளை காட்சியில் ஒரு சுவாரசியமான திருப்பம் வந்து, பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. இடைவேளைக்கு பிறகு படம் வேகமாக நகர்ந்தாலும், சில இடங்களில் மீண்டும் சோதனை தொடங்குகிறது.
“அட போங்கப்பா” என்ற நிலைக்கு வந்த தருணத்தில், பிரமாண்டமான கிளைமேக்ஸ் காட்சி படத்தை மீண்டும் காப்பாற்றுகிறது.
டெக்னிக்கல் அம்சங்கள்
படத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது. கலர்ஃபுலான ஃப்ரேம்கள் கண்களை கவர்கின்றன. தமன் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். சில இடங்களில் ஹாரி பாட்டர் பாணி BGM போல தோன்றினாலும், காட்சிகளுக்கு தேவையான எனர்ஜியை வழங்குகிறது.
CGI வேலைகள் சில இடங்களில் நன்றாக இருந்தாலும், பல காட்சிகளில் செயற்கை தன்மை வெளிப்படுகிறது. இதனால், படத்தின் நம்பகத்தன்மை சில அளவில் குறைகிறது.
க்ளாப்ஸ் (Pluses)
- ஜாலியான பிரபாஸ் நடிப்பு
- இடைவேளை மற்றும் அதன்பிறகான சில காட்சிகள்
- பிரமாண்டமான கிளைமேக்ஸ்
- தமன் பின்னணி இசை
பல்ப்ஸ் (Minuses)
- பார்த்து பழகிய கதை
- பல இடங்களில் சோதிக்கும் திரைக்கதை
- பலவீனமான CGI வேலைகள்
- நாயகிகளுக்கு வலுவான கதாபாத்திரம் இல்லை
இறுதி தீர்ப்பு (Final Verdict)
மொத்தத்தில், தி ராஜா சாப் படம் பல இடங்களில் பார்வையாளர்களை சோதித்தாலும், சில முக்கிய தருணங்களில் கைத்தட்ட வைக்கிறது. பிரபாஸ் ரசிகர்களுக்கு இந்த படம் ஓரளவு திருப்தியை அளிக்கும். ஆனால், பொதுவான ரசிகர்களுக்கு இது ஒரு சராசரி ஹாரர் ஃபேண்டசி திரைப்படமாகவே தோன்றும்.
Overall Rating: ⭐⭐☆☆☆ (2 / 5)
The Raja Saab Movie Review Tamil | Prabhas Raja Saab Review |CineTrendzTamil
0 Comments